மீ டூ விவகாரம்.. பிரச்சினை வந்தா உடனே சொல்லணும்: நடிகை காயத்ரி பேட்டி
|சம்பவம் நடந்து பல வருஷம் ஆனபிறகு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என நடிகை காயத்ரி கூறுகிறார்.
`எதிர்நீச்சல்' சீரியல் புகழ் நடிகை காயத்ரி, தனது கலைப்பயணம் மற்றும் சினிமா வாய்ப்புகள் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்து கொடுக்கவேண்டும் என்று எப்போதும் மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் என்றார்.
மேலும் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து அவர் கூறியதாவது:-
பல சீனியர் நடிகைகள், முன்னர் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால், அங்கேயே அதைப்பற்றி சொல்லவேண்டும். அது நடந்து பல வருஷம் ஆனபிறகு `எனக்கும் இது நடந்துச்சு... ஆனா பேரு மட்டும் சொல்ல மாட்டேன்'னு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பிரச்சினை என்றால் அப்போதே சொல்லவேண்டும்.
சினிமா துறையில் ஒருவர் அட்ஜஸ்ட்மென்டுக்கு கூப்பிடும்போது, ஒருசில நடிகைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக அதை ஏற்றுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்திருக்கலாம். எந்த நடிகையாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்து வரும் நடிகையை கேட்கும் தைரியம் வராது. பெண்களின் பலவீனம்தான், இதற்கெல்லாம் காரணம்.
இவ்வாறு காயத்ரி கூறினார்.