பத்து தல படம் ரிலீசிற்கு பின் திருமணமா...? சிம்புவின் கலகல பதில்
|பத்து தல படம் திரைக்கு வந்த பின்னர் சிம்பு திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என்பதற்கு தனக்கே உரிய பாணியில் சிம்பு பதிலளித்து உள்ளார்.
சென்னை,
காதல், அதிரடி, நகைச்சுவை உள்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து விட்ட நடிகர் சிம்பு கேங்ஸ்டர் எனப்படும் மாபியா கும்பல் தலைவன் வேடமேற்று நடித்து உள்ள படம் பத்து தல.
கன்னட படத்தின் மறுஉருவாக்கம் ஆக தயாராகி உள்ள இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இதனால், அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு அம்சம் வாய்ந்த, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்கத்தில் படம் உருவாகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பத்து தல படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படப்பிடிப்பில் பணியாற்றிய பல்வேறு திரை கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய பத்து தல படத்தின் திரைக்கதை எழுத்தாளர், எதிர்பாராமல் நடைபெறும் விசித்திர நிகழ்வு ஒன்றை பற்றி விளக்கி கூறினார். இதனை கூர்ந்து கேட்க சிம்பு உள்பட அனைவரும் தயாரானார்கள்.
அப்போது அவர், இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து பணியாற்றிய பின்னர் பலருக்கு அடுத்தடுத்து திருமணம் நடந்து உள்ளது. சூரியா, ஜோதிகா, ஆரி மற்றும் ஷிவாடா, பின்னர் கவுதம் கார்த்திக் என இயக்குநருடன் பணியாற்றிய பின்பு அவர்களுக்கு திருமணம் நடந்து உள்ளது என்ற விவரங்களை பட்டியலிட்டார்.
இதனை கேட்ட அனைவரும் சிம்புவை நோக்கி திரும்பினர். ஆனால் அதற்குள் சிம்பு, மொதல்லயே சொல்லி இருக்க கூடாதா...? என்று தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில் கூறினார். பத்து தல திரைப்படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.