'அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை யார் நிராகரிப்பார்' - மானுஷி சில்லர்
|அக்சய் குமார் சார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் என்று மானுஷி சில்லர் கூறினார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் படே மியான் சோட் மியான். இப்படத்தில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கினார்.
இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால், வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 26 வயதாகும் மனுஷி சில்லர், 56 வயதாகும் நடிகர் அக்சய் குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பதாக கூறி சிலர் இணையத்தில் விமர்சித்து வந்தனர்.
தற்போது, இந்த விமர்சனங்களுக்கு நடிகை மானுஷி சில்லர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
எனக்கும் அக்சய் குமார் சாருக்கும் 30 வயது வித்தியாசம் இருப்பதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை பார்த்தேன். அக்சய் குமார் சார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை இங்கு யார் வேண்டாம் என்று நிராகரிப்பார்கள்.
அதுமட்டுமின்றி படக்குழுவினர் நன்றாக யோசித்து கதைக்கேற்றவாறுதான் நடிகர்களைத் தேர்வு செய்கிறார்கள். அக்சய் குமார் சாருடன் நடிக்கும்போது எங்களுக்கிடையேயான வயது வித்தியாசமெல்லாம் தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.