மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு
|மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை,
நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்தில் மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், திரிஷா குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு குஷ்பு, திரிஷா ஆகியோர் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு தரப்பில் இருந்தும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையில் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் சர்ச்சை பேச்சு குறித்த விசாரணைக்கு ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றபோது மன்சூர் அலிகான் இல்லாத நிலையில், அவரது மனைவியிடம் போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். இந்த சம்மனை ஏற்று மன்சூர் அலிகான் இன்று போலீசார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.
இந்தநிலையில் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.