கேலி செய்தவர்களுக்கு மஞ்சு வாரியர் பதிலடி
|கேலி செய்தவர்களுக்கு மஞ்சு வாரியர் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் 'அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அஜித்குமாரின் 'துணிவு' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. துணிவு படத்தில் பாடகர் வைஷாக்குடன் இணைந்து 'காசேதான் கடவுளடா' பாடலை மஞ்சுவாரியர் பாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டுடியோவில் அவர் பாடுவதுபோன்ற புகைப்படங்களும் வந்தன. மஞ்சுவாரியர் பாடும் முதல் தமிழ் பாடல் என்பதால் ரசிகர்களும் கேட்க ஆர்வமாக இருந்தார்கள். இந்த நிலையில் காசேதான் கடவுளடா பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அந்த பாடலில் முழுமையாக வைஷாக் குரல் மட்டுமே இருந்தது. மஞ்சு வாரியர் குரலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று இணையதளத்தில் பலர் கேலி செய்தனர். மீம்ஸ்கள் வெளியிட்டும் விமர்சித்தனர். இதற்கு டுவிட்டரில் விளக்கம் அளித்து மஞ்சுவாரியர் கூறும்போது, "காசேதான் கடவுளடா பாடலில் என்னுடைய குரல் கேட்கவில்லை என்று சொல்பவர்கள் கவனத்துக்கு. யாரும் வருத்தப்பட வேண்டாம். பாடலின் வீடியோ பாடலுக்காக எனது குரல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உங்கள் அக்கறைக்கு நன்றி. கேலி செய்ததை ரசித்தேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.