மஞ்சு வாரியரின் 'புட்டேஜ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
|நடிகை மஞ்சு வாரியர் 'புட்டேஜ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' , ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.
தற்போது, இவர் 'புட்டேஜ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சைஜூ ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இதில் மஞ்சு வாரியருடன் இணைந்து விஷக் நாயர், காயத்ரி அசோக், சீத்தல் தம்பி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கடந்த 2-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால், உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர்.
இந்தநிலையில், தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வருகிற 23-ந் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.