மஞ்சு வாரியர் மீது நடிகர் திலீப் புகார்
|நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னை சிக்க வைத்தது மஞ்சு வாரியர் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை கடத்தலில் தொடர்பு இருப்பதாக நடிகர் திலீப்பும் கைதானார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கேரள கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது. நிறைய சாட்சிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் திலீப் தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மீது குற்றம்சாட்டி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் 'நடிகை கடத்தல் வழக்கை முடிக்காமல் தாமதம் செய்கின்றனர். தனிநீதிபதிக்கு பதவி உயர்வு கிடைத்து வேறு கோர்ட்டுக்கு செல்வதுவரை விசாரணையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளனர். வழக்கை விரைவாக முடிக்க, தனி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும். என் முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியரும், பாதிக்கப்பட்ட நடிகையும் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து இந்த வழக்கில் என்னைச் சிக்க வைத்துள்ளனர். திரையுலகில் என் வளர்ச்சியைப் பிடிக்காத கும்பலின் சதியும் இதில் இருக்கிறது. இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.