'புற்றுநோய் பாதிப்பின்போது எனக்கு இதுதான் நடந்தது'- மனிஷா கொய்ராலா வருத்தம்
|மனிஷா கொய்ராலாவுக்கு கடந்த 2012-ல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மும்பை,
இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து மனிஷா கொய்ராலா கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது,
'அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு நிறைய உறவினர்களுடன் பெரிய குடும்பம் இருக்கிறது. எல்லோருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் எல்லோரும் விலகி போனார்கள். நண்பர்களும் விலகினர். யாருமே என்னை பார்க்க வரவில்லை.
எல்லோரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தபோது எனக்கு பல விஷயங்கள் நடந்தன. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்த மாதிரி என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் வேலை பார்க்கிறேன்', இவ்வாறு கூறினார்.