மணிரத்னத்தை சந்தித்த மனிஷா கொய்ராலா
|தமிழில் மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'இந்தியன்', அர்ஜுன் ஜோடியாக 'முதல்வன்', ரஜினிகாந்துடன் 'பாபா' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
2010-ல் நேபாள தொழில் அதிபரை திருமணம் செய்து 2 வருடங்களிலேயே விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மனிஷா கொய்ராலாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அமெரிக்கா சென்று ஒரு வருடம் சிகிச்சை பெற்றார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புற்றுநோய் விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மனிஷா கொய்ராலா டைரக்டர் மணிரத்னத்தை சந்தித்தார். அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு, "இனிமையான மனிதர் மணிரத்னம். அவர் படத்தில் நடித்தது நிறைவாக இருந்தது. மணிரத்னம் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளன. அவர் ஒரு பொக்கிஷம். மணிரத்னத்தின் ஒவ்வொரு படமும் தலைசிறந்த படைப்புகள்'' என்று கூறியுள்ளார்.