< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் 65 ஆண்டுகள்... கமலை கொண்டாடிய தக் லைப்  படக்குழு!
சினிமா செய்திகள்

சினிமாவில் 65 ஆண்டுகள்... கமலை கொண்டாடிய 'தக் லைப்' படக்குழு!

தினத்தந்தி
|
13 Aug 2024 5:00 PM IST

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ‘தக் லைப்’ படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தமிழ் திரையுலகில் (கோலிவுட்) 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவ்வாறு இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய கமல்ஹாசன், 1959-ம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார். பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி வியந்துகொண்டே இருக்கின்றனர். இறுதியாக, அவர் நடிப்பில் வெளியான கல்கி ஏடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

'தக் லைப்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனை கைதட்டி வரவேற்று, சினிமாவில் அவரின் 65-வது ஆண்டுக்கான வாழ்த்துகளைத் 'தக் லைப்' படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

மேலும் செய்திகள்