மீண்டும் விக்ரமுடன் நடிக்கும் ஐஸ்வர்யாராய்
|மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் முதல் முறையாக சேர்ந்து நடித்தனர். இந்த படத்தில் அவர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. இந்தியிலும் ராவணன் வெளியானது.
பின்னர் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களிலும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யாராய் நந்தினியாகவும் இணைந்து நடித்து இருந்தனர். இதிலும் அவர்களின் நடிப்பு பேசப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வசூல் பார்த்தன.
இந்தநிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்து ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் பரவி உள்ளது. இந்த படம் குறித்த வேறு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு விக்ரம், ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் படத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.