< Back
சினிமா செய்திகள்
ஓரின சேர்க்கையாளராக மம்மூட்டி..? ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் படத்தை வெளியிட தடை
சினிமா செய்திகள்

ஓரின சேர்க்கையாளராக மம்மூட்டி..? ஜோதிகா நடித்துள்ள 'காதல் தி கோர்' படத்தை வெளியிட தடை

தினத்தந்தி
|
21 Nov 2023 1:34 PM IST

ஓரின சேர்க்கை உறவை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் இருப்பதால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, தற்போது நடிகர் மம்மூட்டியுடன் 'காதல் தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'காதல் தி கோர்' திரைப்படம் வருகிற 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு கடந்த மாதம் அறிவித்தது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ஓரின சேர்க்கை உறவை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் இருப்பதால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி ஓரின சேர்கையாளராக நடித்திருப்பதாக தகவல் கசிந்தது. இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து படக்குழு தரப்பில் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்