மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்
|கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். அவருக்கு வயது 80. நடிகை கவியூர் பொன்னம்மா 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உடல்நலக்குறைவால் காலமானார். கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே மலையாள நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ், பொன்னம்மாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த பொன்னம்மாவுக்கு பிந்து என்கிற மகள் உள்ளார்.
மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த கவியூர் பொன்னம்மா மலையாள சினிமாவின் அம்மாவாகவே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். கவியூர் பொன்னம்மா மறைவிற்கு கேரள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.