'மேக்கப்பிற்கு நான்கு மணி நேரம்.. தோலில் தடிப்புகள் வந்தன' - தங்கலான் நடிகை
|தங்கலான் படத்தில் பெரும்பாலான காட்சிகளை வெயிலில் படம்பிடித்ததாக மாளவிகா மோகனன் கூறினார்.
சென்னை,
'பேட்ட' படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பிறகு தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் தனுஷின் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலக்கட்டப் படமான 'தங்கலான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர்.
இதில் மாளவிகா மோகனன் கூறியதாவது; 'தங்கலான்' என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். இந்தப் படத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு மேக்கப் போடுவதற்கு நான்கு மணி நேரம் ஆகும். நாங்கள் பெரும்பாலான காட்சிகளை வெயிலில்தான் படம் பிடித்தோம்.
அதன் காரணமாக என் தோலில் தடிப்புகள் கூட வந்தன. ஒரு தோல் மருத்துவர் ஒரு கண் மருத்துவர் உட்பட செட்டில் மொத்தம் ஐந்து டாக்டர்கள் இருந்தனர். இந்தப் படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டோம். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்', இவ்வாறு கூறினார்.