மீண்டும் வருகிறார் மலர் டீச்சர்... 'பிரேமம்' படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
|பிரேமம் படம் சென்னையில் மலையாள பதிப்பில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
சென்னை,
கடந்த 2015ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
இந்த படம் காதலை மையப்படுத்தி மலையாளத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் மலையாள பதிப்பில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் இது ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து இருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் தற்போது வரை ரசிகர்கள் பலரால் விரும்பப்படுகிறது. 'பிரேமம்' திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி 'பிரேமம்' திரைப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மலர் டீச்சரை மீண்டும் திரையில் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.