ஓட்டல் தொழிலில் மகேஷ்பாபு
|தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஓட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்.
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் படங்கள் வசூலில் சக்கைபோடு போடுகின்றன. அதிக சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில்தான் கல்லூரி படிப்பை முடித்தார். மகேஷ்பாபு சினிமாவில் நடிப்பதோடு இல்லாமல், விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். இன்னொரு புறம் தொழில் அதிபராகவும் வளர்ந்து வருகிறார். ஏற்கனவே சொந்தமாக சொகுசு தியேட்டர்கள் கட்டி திறந்துள்ளார். சொந்தமாக ஆடை நிறுவனமும் நடத்துகிறார். தற்போது இன்னொரு புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கிறார். அதாவது தனது மனைவி நம்ரதா பெயரில் ஓட்டல் தொழிலில் ஈடுபட இருக்கிறார். முதல் கட்டமாக ஐதராபாத்தில் நவீன வசதிகளுடன் 2 நட்சத்திர ஓட்டல்கள் கட்ட இருக்கிறார். அதில் ஒன்று பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைய இருக்கிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஓட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார். ஓட்டல்களை கவனிக்கும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைக்க உள்ளார்.