'மகாபாரதம்' படம் 10 பாகங்களாக வரும் - டைரக்டர் ராஜமவுலி தகவல்
|பாகுபலி படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக மாறியவர் ராஜமவுலி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படமும் உலக அளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருதும் வென்றது. ராஜமவுலி ஏற்கனவே அளித்த பேட்டியில், "இந்திய கதைகளை உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறேன். மகாபாரத கதையை படமாக்குவது என் நீண்ட நாள் கனவுத் திட்டம்'' என்றார்.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமவுலியிடம் மகாபாரதம் கதை தொலைக்காட்சியில் 266 எபிசோடுகளாக ஒளிபரப்பானது. நீங்கள் அதை படமாக்கும்போது எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ராஜமவுலி கூறும்போது, "இது மிகவும் பெரிய படம். மகாபாரதம் எடுத்தால் நிச்சயம் பத்து பாகங்களாக எடுக்க வேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஆனால் எத்தனை பாகங்களாக வரும் என்பதை இப்போதே சரியாக கணிக்க முடியாது. இந்திய இதிகாச கதைகளை உலகிற்கு சொல்ல வேண்டும். மகாபாரதம் என் நீண்ட கால கனவு படம். அந்த மகா சமுத்திரத்திற்குள் அடியெடுத்து வைக்க நிறைய காலம் பிடிக்கும். அதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து படங்கள் எடுத்து விடுவேன். தற்போது ஒரு படம் எடுக்க எனக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது. இந்த கணக்கில் மகாபாரதம் எடுக்க இன்னும் 10 அல்லது 12 ஆண்டுகள் ஆகலாம்'' என்றார்.