'வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு
|'வேட்டையன்' படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
வருகிற அக்டோபர் 10-ம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள, இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிலையில், 'வேட்டையன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அவர், "வேட்டையன் படத்தில் என்கவுன்டரை ஆதரிப்பது போல காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. எனவே படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க அல்லது மியூட் செய்ய வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, 'வேட்டையன்' படத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.