மாவீரன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை..!
|சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.
இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட வாய்ப்பிருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவன உரிமையளர் கே.வி.அருண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதங்களை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.