சர்ச்சையில் மாதவன்
|பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன் தான், எனது அறியாமையை உணர்கிறேன் என நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மாதவன் நடித்து இயக்கி உள்ள ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் அவரிடம் பழைய பஞ்சாங்கத்துக்கும், இப்போதைய ராக்கெட்ரி படத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மாதவன் கூறும்போது, ''இரண்டுக்கும் தொடர்பு உள்ளது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது" என்றார். மாதவனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர்.
இது பரபரப்பானது. சர்ச்சைக்கு பதில் அளித்து வலைதளத்தில் மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், ''பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நான் அறியாமையில் இருந்துள்ளேன். ஆனால், நாம் இரண்டு என்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்' என்று தெரிவித்துள்ளார்.