கேப்டனுக்கு மரியாதை செய்த 'லப்பர் பந்து' படக்குழு
|‘லப்பர் பந்து’ படக்குழு, விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சஞ்சனா, சுவாசிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழரசன் பச்சமுத்து 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.
கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டக்கத்தி தினேஷுக்கும், அவருக்கு நிகராகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞர் ஹரிஷ் கல்யாணுக்குமிடையே நடக்கும் உணர்வு மோதல்களைக் கதைக்களமாகக் கொண்டு, கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.
'லப்பர் பந்து' படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். அவருக்கான பில்டப் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களின் ஆராவாரத்தால் திரையரங்கமே அதிர்கிறது. இதுதான் விஜயகாந்த்துக்கு உண்மையான அஞ்சலி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'லப்பர் பந்து' படக்குழு, விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தே.மு.தி.க. அலுவலகத்திற்கு செல்லும் படக்குழு விஜயகாந்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். மேலும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்குகின்றனர்.
இதற்கு முன்பு விஜய்யின் 'தி கோட்' படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு அப்படக்குழு பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.