'தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக உள்ளது' - வைரலாகும் வீடியோ குறித்து ராஷ்மிகா வேதனை...!
|நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மும்பை,
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'இந்த பதிவை நான் வேதனையுடன் பகிர்கிறேன். இணையத்தில் வேகமாக பரப்பப்படும் 'டீப் பேக்' முறையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ பற்றி பேச வேண்டும். தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது.
இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். நான் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்திருந்தால் அதனை நான் எப்படி சமாளித்துருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோல் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை நாம் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.