< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ்தான் எனது வழிகாட்டி - அர்ஜுன்தாஸ்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ்தான் எனது வழிகாட்டி - அர்ஜுன்தாஸ்

தினத்தந்தி
|
5 May 2024 8:55 PM IST

நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்ஜுன்தாஸ் கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன்தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நடிகர் அர்ஜுன்தாஸ் பேசும்பொழுது, " என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி" என்றார்.

நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? என்ற கேட்ட கேள்விக்கு " நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம். என்னுடைய படங்களில் வன்முறை அதிகமாக இருப்பது உண்மைதான். இனி வரும் படங்களில் அதனைக் குறைத்துக் கொள்கிறேன்.

கூலி படத்திற்காக இதுவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன். இந்தியில் ஒரு படம். தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படம் நடித்து வருகிறேன். மேலும் மலையாளத்திலும் நடித்து வருகிறேன். அதிக ரசிகர்கள் தனக்கு இருப்பதாகச் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு நண்பர், வழிகாட்டியாக இருந்துள்ளார். என்னுடைய எல்லா இடத்திலும் அவரைப் பற்றி பேச அவர்தான் காரணம். அவரால் தான் நான் இந்த இடத்தில் உள்ளேன் " என்றார்.

அர்ஜுன்தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்