< Back
சினிமா செய்திகள்
லியோ இரண்டாம் பாதியில் தொய்வு... வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!
சினிமா செய்திகள்

'லியோ' இரண்டாம் பாதியில் தொய்வு... வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!

தினத்தந்தி
|
29 Oct 2023 1:54 AM IST

திரைப்படத்தின் வசூலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனிடையே 'லியோ' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.461 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'லியோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதியில், குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் சற்று தொய்வு இருப்பதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற 'ஜப்பான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 'லியோ' திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்தோம். படத்தின் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அதை ஏற்றுக்கொள்கிறேன். எனது வேலை அதோடு முடிந்தது. திரைப்படத்தின் வசூலுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்