'லோக்கல் சரக்கு' - சினிமா விமர்சனம்
|‘குடி குடியை கெடுக்கும்' என்ற கருவை மையமாக வைத்து சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர்.
தங்கையுடன் வசிக்கும் தினேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருக்கிறார். எதிர்வீட்டில் குடியேறும் உபாசனாவிடமும் பணம் வாங்கி குடிக்கிறார். இதனால் வெறுப்பாகும் தங்கை தனக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இந்த நிலையில் தினேசுக்கும் உபாசனாவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக ஒருவர் சொல்ல தினேஷ் குழம்புகிறார். அவர்கள் திருமணம் நடந்தது உண்மையா?. குடிப்பழக்கத்தில் இருந்து தினேஷ் விடுபட்டாரா? என்பதற்கு விடையாக மீதி கதை..
நாயகனாக வரும் பிரபல நடன இயக்குனர் தினேஷ், அப்பாவி குடிகாரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். தனது மனைவிக்காக வில்லனிடம் கெஞ்சும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.
நாயகி உபாசனா பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையிலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிளைமாக்சில் பிரச்சினையை அவர் எதிர்கொள்ளும் விதம் கைதட்டல் பெறுகிறது.
தினேஷின் நண்பராக வரும் யோகி பாபு, நாயகியை ஒருதலையாக காதலிக்கும் காட்சிகள் சிரிப்பு ரகம். சாம்ஸ், காமெடி ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். செண்ட்ராயன், இமான் அண்ணாச்சி, வினோதினி, சிங்கம் புலி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள். ரெமோ சிவா வில்லனாக மிரட்டுகிறார்.
முதல் பாதி காட்சிகளை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். பிற்பகுதி கதை ஒன்ற வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பழனியின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதனின் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பலம்.
'குடி குடியை கெடுக்கும்' என்ற கருவை மையமாக வைத்து சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். பாலியல் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுத்ததற்காக, பாராட்டலாம்.