< Back
சினிமா செய்திகள்
உத்தம வில்லன் படத்தால் நஷ்டம்... சொன்ன வாக்கை காப்பாற்றாத கமல் - இயக்குநர் லிங்குசாமி விமர்சனம்
சினிமா செய்திகள்

'உத்தம வில்லன்' படத்தால் நஷ்டம்... சொன்ன வாக்கை காப்பாற்றாத கமல் - இயக்குநர் லிங்குசாமி விமர்சனம்

தினத்தந்தி
|
18 April 2024 4:24 PM IST

‘உத்தம வில்லன் ' படத்தால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தங்கள் நிறுவனத்திற்கு இன்னொரு படம் செய்து தருவதாக கமல்ஹாசன் கொடுத்த வாக்கை 9 வருடங்கள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானப் படம் 'உத்தம வில்லன்'. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் தயாரிப்பாளராக லிங்குசாமிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் படம் லிங்குசாமிக்கு லாபத்தைக் கொடுத்தது என்ற பேச்சு இணையத்தில் எழுந்ததை அடுத்து இதைப் பற்றி அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி லிங்குசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ' 'தீபாவளி', 'பையா', 'வேட்டை', 'இவன் வேற மாதிரி', 'வழக்கு எண் 18/9', 'கும்கி', 'கோலி சோடா', 'மஞ்சப்பை', 'சதுரங்க வேட்டை', 'ரஜினிமுருகன்' போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். எங்கள் நிறுவனம் தான் கமல்ஹாசன் அவர்களை வைத்து first copy (முதல் பிரதி) அடிப்படையில் 'உத்தம வில்லன்' படத்தைத் தயாரித்தது. ஆனால், அந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது.

இது கமல்ஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமல்ஹாசன் அவர்களும் அவரது சகோதரர் சந்திரஹாசன் அவர்களும் மீண்டும் ஒரு படம் நடித்துத் தருவதாக எழுத்துபூர்வமாக எங்களுக்கு உறுதி அளித்தனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வலைப்பேச்சு என்கிற யூடியூப் சேனலில் 'உத்தம வில்லன்' மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குநர் லிங்குசாமி கூறியதாக இன்று (17.04.2024) தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்று தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

தனது இந்தப் பதிவுடன் 'உத்தம வில்லன்' படம் குறித்து இதற்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றின் வீடியோவையும் இணைத்துள்ளார் லிங்குசாமி. அதில் கமல் மீது தான் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்ததாகவும் அதனாலேயே 'உத்தம வில்லன்' படத்தின் கதையில் தலையிடவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். மேலும், "ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் கதையில் மாற்றம் செய்வார். இறுதியாகப் படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளராகத் தாங்கள் சொல்லும் திருத்தங்கள் மட்டும் செய்தால் போதும் எனவும் அவரிடம் கோரிக்கை வைத்தோம் " எனச் சொல்லி இருக்கும் லிங்குசாமி, "முதலில் நாங்கள் சொல்லும் திருத்தங்களை செய்கிறோம் என்று சொன்னார் கமல். ஆனால், அடுத்த நாள் போய் பார்த்தால் எதையும் செய்யவில்லை. 'படம் நன்றாக வந்திருக்கிறது என்னை நம்புங்கள்' என்று சொன்னார்.

நாங்கள் சொல்லிய திருத்தங்களை செய்திருந்தால் படம் அப்போது நன்றாக ஓடியிருக்கலாம். இந்த நஷ்டத்திற்காக ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எங்கள் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றில் நடித்துத் தருவதாக கமல் சொன்னார். 9 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் செய்யவில்லை. அவர் மீதுள்ள மரியாதைக்காக பொறுமையுடன் இருக்கிறோம்" என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும் செய்திகள்