'லிங்கா': அனுஷ்கா ஷெட்டி இடம்பெற்ற காட்சியை நீக்கினாரா ரஜினி?
|'லிங்கா' படத்தின் இரண்டாம் பாதியில் ரஜினிகாந்த் சில மாற்றங்களை செய்ததாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லிங்கா'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், அதன் அதிக தயாரிப்பு செலவுகள் காரணமாக பாக்ஸ் ஆபிஸ் தோல்வியாகக் கருதப்பட்டது.
இந்த சூழலில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ரஜினிகாந்த் சில மாற்றங்களை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, படத்தின் இரண்டாம் பாதியை ரஜினிகாந்த் மாற்றியதாகவும், படத்தின் முக்கிய கூறுகளாக இருந்த அனுஷ்கா ஷெட்டி இடம்பெறும் பாடல் மற்றும் கிளைமாக்ஸில் சில காட்சிகளை நீக்கியதாகவும் கூறியுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், லிங்கா மற்றும் அவரது பேரன் ராஜா லிங்கேஸ்வரன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும், இதில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.