பாலிவுட்டை வலம் வரும் விஜய் தேவரகொண்டா
|தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கில் பல நடிகர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக மாற்றியமைத்த பெருமைக்குரியவரும், கமர்ஷியல் ரீதியாக பல வெற்றிப்படங்களை கொடுத்துவருபவருமான பூரிஜெகன்னாத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
இந்தப் படம் தெலுங்கு மட்டுமில்லாது, இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார், விஜய் தேவரகொண்டா. இந்தி படம் என்றால், அந்தப் படத்தை எடுப்பதை விடவும், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில்தான் அவர்கள் மெனக்கெடுவார்கள்.
அந்த வகையில் 'லைகர்' படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரெயிலில் இருவரும் பயணித்து, 'லைகர்' படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டனர். ரெயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில் விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.
ரூ.125 கோடியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரம்யாகிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோருடன் குத்துச்சண்டை வீரரான மைக் டைசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஆகஸ்டு 25-ந் தேதி வெளியாக இருக்கிறது.