< Back
சினிமா செய்திகள்
மாற்றம் சேவையா மட்டும் இருக்கட்டும். அரசியலாக்கிடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அறிவுரை
சினிமா செய்திகள்

'மாற்றம்' சேவையா மட்டும் இருக்கட்டும். அரசியலாக்கிடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அறிவுரை

தினத்தந்தி
|
4 May 2024 3:31 PM GMT

'மாற்றம்' துவக்க விழாவில் நடிகர் லாரன்ஸின் தாயார், "இது சேவையாக மட்டுமே இருக்கணும். அரசியலாக்கிடாதப்பா" என அறிவுரை கூறியிருக்கிறார்.

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் உட்படப் பலருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியன்று 'சேவையே கடவுள்' அறக்கட்டளையிலிருந்து 'மாற்றம்' என்ற பெயரில் பல உதவிகளை செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த அமைப்பில் தானும் இணைந்துக் கொள்வதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் மூலமாக முதற்கட்டமாக விவசாயிகளுக்கு 10 டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இது குறித்து அவர், "நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போகிறேன். எல்லோரும் இந்தப் பயணத்தில் இணைந்து எனக்கு உதவி புரியுங்கள். வார்த்தைகளைவிட செயல் பெரியது" எனப் பதிவிட்டிருக்கிறார். இதற்கான துவக்க விழாவில் நடிகர் லாரன்ஸின் தாயார், "இது சேவையாக மட்டுமே இருக்கணும். அரசியலாக்கிடாதப்பா!" என அறிவுரை கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்