'லியோ' திரைப்பட வெற்றி விழா - பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை
|வெற்றி விழாவிற்கு வர பாஸ், ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் முதல் வாரத்தில் 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.
இந்த வெற்றியை கொண்டாட, நவம்பர் 1-ந்தேதி(நாளை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மனு கொடுத்திருந்தார். விழாவில் விஜய்யும் கலந்துகொள்ள உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 'லியோ' வெற்றி விழாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் விழாவிற்கு வரும் ரசிகர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ள நிலையில், மாலை 4 மணி முதல் ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழாவிற்கு வரும் ரசிகர்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ, சாலைகளில் வாகனங்களை நிறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.