'லியோ' பட பாடல் - நடிகர் விஜய் மீது புகார்
|நா ரெடி பாடல் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இதற்கிடையே, 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "ஆல்டர் ஈகோ நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பாடல் வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. மேலும் நா ரெடி பாடல் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'லியோ'படத்தின் 'நா ரெடி தான் வரவா'பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.