< Back
சினிமா செய்திகள்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
சினிமா செய்திகள்

'லெஜண்ட்' சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தினத்தந்தி
|
16 Sept 2024 2:42 PM IST

‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் 2வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த 'லெஜண்ட்' திரைப்படம், கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். நடிகை ஊர்வசி ரவுட்டேலா, நடிகர் விவேக், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

முதல் திரைப்படமான 'லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது 2-வது படத்தை அவர் தொடங்கினார். லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது பூஜையுடன் தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்