< Back
சினிமா செய்திகள்
இந்தியன்-2 படத்தை பாராட்டிய முன்னணி இயக்குநர்கள்
சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தை பாராட்டிய முன்னணி இயக்குநர்கள்

தினத்தந்தி
|
14 July 2024 10:10 PM IST

இந்தியன்-2 படத்திற்கு முன்னணி இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இந்த படத்தை புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகநாயகன் கமல்ஹாசனின் திறமைக்கு இந்தியன்-2 திரைப்படம் ஒரு சான்றாகும். படத்திற்கு அனிருத்தின் அற்புதமான பின்னணி இசையுடன் பிரம்மாண்டமான காட்சிகளை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்த இயக்குநர் சங்கருக்கு பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.




அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 திரைப்படத்தை மிகவும் ரசித்தேன். அவர் மிகப்பெரிய சிந்தனைகளை திரையில் செயல்படுத்தும் விதம் எப்போதும் எனக்கு உத்வேகம் அளிக்கும்.

நடிகர் கமல்ஹாசன் எப்போதும் போல் அட்டகாசம்தான். இந்தியன் முதல் பாகத்தின் இசையோடு சேனாபதியின் அறிமுகத்தைப் பார்ப்பது ஒரு அருமையான அனுபவம். இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விதம் சிறப்பு. அனிருத், ரவிவர்மன், குணால் ராஜன், லைகா நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்