தலைவர் 170 - சமூகவலைதளத்தை அதிரவைத்த ரஜினியின் திடீர் பதிவு
|தலைவர் 170 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலில் ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகவுள்ள "லால் சலாம்" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, நாகர்கோயில், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 2ஆம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மும்பை சென்றார் ரஜினிகாந்த்.
கடந்த 4 -ம் தேதி பூஜை தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டானது. மேலும் ஹூட்டிங் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ஜெயிலர் படத்துக்கு எதிர்பார்த்ததுக்கு மேலான வெற்றி கிடைத்துள்ளது. 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் பண்றாரு. இது நல்ல சமூக கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தன் இதயம் மகிழ்ச்சியில் துடிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.