எனக்கு வாய்ப்பு தராத முன்னணி நடிகர்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்
|தமிழில் அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, பர்ஹானா உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடிக்கவில்லை.
இதற்கான காரணம் குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, "காக்கா முட்டை படத்தில் நடித்த பிறகு நடிகர்கள் பலர் என்னை பாராட்டினர். ஆனால் யாரும் அவர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. காக்கா முட்டை படத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.
என்னுடைய நடிப்பை பாராட்டிய தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற சில முக்கிய நடிகர்களைத் தவிர, என்னுடைய நடிப்பை பாராட்டிய மற்ற நடிகர்கள் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை வழங்கவில்லை.
கதாநாயகியை மையமாக வைத்து உருவான 15-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்தும் கூட இதுவரை பெரிய நடிகர்கள் ஏன் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புரியவில்லை. எனவேதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.