தனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..நடிகர் சத்யராஜின் மகள் வெளியிட்ட வீடியோ
|தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது என்று திவ்யா குற்றம் சாட்டியுள்ளார்.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வருகிறார். தினமும் தனது இன்ஸ்டாவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகள் போட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் மீது திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " சில தனியார் மருத்துவமனைகளில் லாபம் வருவதற்காக, நோயாளிகளிடம் தேவையில்லாத ரத்த பரிசோதனை, தேவையில்லாத ஸ்கேன் இதெல்லாம் பண்ண வைக்கிறாங்க. சில நோயாளிகள் குணமானதற்கு பிறகும் இரண்டு நாட்கள் கழித்தே அவர்களை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது.
எங்கள் அமைப்பு மூலம் சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது முடியாத விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் எந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோட நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.