26 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்.. தமிழகத்தை பதற வைத்த கேரள இளம்பெண்ணின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
|1996ஆம் ஆண்டு தமிழகத்தை பதற வைத்த கேரளப் பெண் லேடி சுகுமார குருப்பின் கதை திரைப்படமாக உருவாக உள்ளது.
திருவனந்தபுரம்,
1996ஆம் ஆண்டு தமிழகத்தை பதற வைத்த கேரளப் பெண் லேடி சுகுமார குருப்பின் கதை திரைப்படமாக உருவாக உள்ளது.
இந்த படம் மருத்துவர் ஓமனா ஈடனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ஓமனா என்ற பெண் மருத்துவர் தனது நண்பரை கொன்று சூட்கேஸில் அடைத்து தப்பியோடிய சம்பவத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாக உள்ளது.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தீபக் விஜயன் எழுதியுள்ளார். நவ்ஜித் நாராயணன் இயக்குகிறார். திரைக்கதையை முடிக்க 6 வருடங்கள் ஆகின என்று அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகை கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண் மருத்துவரான ஓமனா, (இன்டர்போல்) சர்வதேச போலீசின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர். 1996 ஆம் ஆண்டு டாக்டர் ஓமனா தனது காதலனை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் தலைப்புச் செய்திகளில் வெளிவந்தது.
சுமார் 26 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் இது. ஜூலை 11,1996இல் ஊட்டியில் இருந்த டாக்டர் ஓமனா என்பவர், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தனது நண்பர் முரளிதரனை கொன்றார். ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அவரை கொலை செய்துவிட்டு, துண்டு துண்டாக அவரது உடலை வெட்டி சூட்கேசில் அடைத்துவிட்டார்.
பின்னர், அதை காரில் ஏற்றிக்கொண்டுச் சென்ற ஓமனாவை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த வழக்கில் 2001இல் ஓமனா ஜாமினில் வெளிவந்தார். அதன்பின் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மலேசியாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது. அங்கு அடையாளம் தெரியாத இந்தியப் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நாளிதழில் வெளியான புகைப்படம், உயிரிழந்தவர் டாக்டர் ஓமனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்துக்கான பொருத்தமான தலைப்பு மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் இரு மொழிகளிலும் பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தமிழ் முன்னணி நடிகை படத்தின் நாயகியாக இருப்பார் என்று அறியப்படுகிறது.
எல்லா வகையிலும் இப்படம் ஒரு சிறந்த காட்சி அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் நவ்ஜித்.