< Back
சினிமா செய்திகள்
குரங்கு பெடல் : என் வாழ்வின் பல முக்கிய தருணங்களை நினைவுப்படுத்திய படம் - காளி வெங்கட்
சினிமா செய்திகள்

குரங்கு பெடல் : என் வாழ்வின் பல முக்கிய தருணங்களை நினைவுப்படுத்திய படம் - காளி வெங்கட்

தினத்தந்தி
|
2 May 2024 8:43 PM IST

எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு ‘குரங்கு பெடல் ' படத்தில் நடிக்கும்போது வந்தது என்று நடிகர் காளி வெங்கட் கூறினார்.

'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையைத் தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

காளி வெங்கட் பேசுகையில், "இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. 'குரங்கு பாடல்' கோவா பிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டுப் பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும்போது வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், "இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். 'வாகை சூடவா' படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி" என்றார்.

இயக்குநர் கமலக்கண்ணன், "இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்தப் படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள்" என்றார்.

மேலும் செய்திகள்