பிரபாஸ்25 படத்தில் வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார்
|பிரபாசின் 25-வது படம் குறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
சென்னை,
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' ரூ.1,000 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் இப்படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் 'டிரெய்ன் டு பூசன்', 'தி கேங்ஸ்டர்', தி காப், தி டெவில்' மற்றும் 'தி ரவுண்டப்' போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
'ஸ்பிரிட்' படத்தை இந்திய மொழிகளுடன் சேர்த்து சீன மற்றும் கொரிய மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மையானால் பிரபாஸ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் 'ஸ்பிரிட்' ஒரு விருந்தாக இருக்கும்.
ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.