கொடைக்கானல் பங்களா விவகாரம்: தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் பாபி சிம்ஹா மனு
|வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கொடைக்கானல் போலீசாருக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டியதற்கு, பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரது நண்பர் உசேன் அளித்த புகாரின் அடிப்படையில் பாபி சிம்ஹா மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் புகார் அளித்த உசேனுடன் சமரசம் செய்து கொண்ட நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நடிகர் பாபி சிம்ஹா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது நீதிபதி சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பாபி சிம்ஹா தரப்பில் ஆஜரான வக்கீல், புகார்தாரர் உசேன் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா இருவருக்கும் இடையே சமரசமான நிலையில், இதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். எனவே பாபி சிம்ஹா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து இருவரின் சமரச பிரமாண பத்திரத்தை அரசு வக்கீலிடம் கொடுக்க வேண்டும் என்றும், புகார்தாரர் தரப்பில், வக்கீலை நியமித்து கோர்ட்டில் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கொடைக்கானல் போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.