< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கிங் ஆப் கோதா
சினிமா செய்திகள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கிங் ஆப் கோதா'

தினத்தந்தி
|
20 Aug 2023 10:52 AM IST

தந்தையின் நிழலில் இல்லாமல், தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் மட்டுமே கடந்த 11 ஆண்டுகளாக சினிமாத் துறையில் முன்னேறிக் கொண்டிருப்பவர், துல்கர் சல்மான். தன்னுடைய தாய் மொழியான மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளிலும் அவரை நடிக்க அழைப்பதே, அவரது நடிப்புத் திறமையின் சான்றாக குறிப்பிடலாம்.

ஆக்ஷன் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமானாலும், 'செகண்ட் ஷோ' என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை எல்லாம் பெற்றுவிடவில்லை. அப்படத்தின் கதையானது, ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தைத்தான் பெற்றிருந்தது. ஆனால் அந்தப் படத்தில் நடித்திருந்த துல்கர் சல்மானின் நடிப்பின் மீது எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படத்தில், அதுவும் முதல் படத்தில் தன்னுடைய நடிப்பு முத்திரையைப் பதித்திருந்தார்.

அடுத்தடுத்து அவர் நடித்த 'உஸ்தாத் ஓட்டல்', 'பெங்களூர் டேஸ்', 'வாயை மூடிப் பேசவும்', '100 டேஸ் ஆப் லவ்', 'சார்லி', 'களி', 'கம்மாட்டிபாடம்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், 'குரூப்', 'சல்யூட்', 'சீதாராமம்' என்று கடந்த 10 வருடங்களில் அவரது கதைத் தேர்வும், ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

மேற்சொன்ன படங்களில் பலவற்றை எத்தனை முறை பார்த்தாலும் அது நமக்கு சலிப்பை உண்டாக்காத படங்களாக இருப்பதை நம்மால் உணர முடியும். மேற்கண்ட படங்கள் அனைத்தும் கதாபாத்திர மாறுதலைக் கேட்காதவை, அப்படியே வந்து நடித்து விட்டுப் போகலாம் என்றாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிக்கும் போது, தன்னுடைய முகத்தில், ஹேர் ஸ்டைலில், நடை உடை பாவனையில் என்று சிறிய மாற்றத்தையாவது செய்து நடிப்பதில் துல்கர் சல்மானுக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உண்டு. அதையும் தாண்டி, 'கம்மாட்டிபாடம்' படத்தில் தன்னுடைய தோற்றத்தையும் மாற்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

யதார்த்தமாகவும், அதே நேரம் தன்னுடைய கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை குறையே இல்லாமல் வழங்குவதிலும் இந்திய அளவில் துல்கா் சல்மான் சிறப்பான கலைஞர் என்பதை எவரும் மறுக்க இயலாது. அதனால் தான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளிலும் அவரால் நடிக்க முடிகிறது. அவரை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அப்படி ஏற்றுக்கொண்ட காரணத்தால்தான், மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'வாயை மூடிப் பேசவும், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களை தமிழ் ரசிகர்களும், 'சீதாராமம்', 'மகாநடி' போன்ற படங்களை தெலுங்கு ரசிகர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள், வெற்றிபெறச் செய்கிறார்கள்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம்தான், 'கிங் ஆப் கோதா'. மலையாளத்தில் ஒரு படத்தை ரூ.4 அல்லது ரூ.5 கோடிகளிலேயே கூட முடித்து விடுவார்கள். அதிக பட்சமாக ரூ.30 கோடிக்குள் முடிக்கப்பட்டு விடும். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களைப் போல ரூ.500 கோடி, ரூ.700 கோடி பட்ஜெட் எல்லாம் மலையாள சினிமாவில் கிடையாது. வரலாற்றைத் தழுவிய திரைப்படங்கள் மட்டுமே, மலையாள சினிமாவில் அதிகப் பொருட்செலவை சந்தித்திருக்கின்றன.

அந்த வகையில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படம், 2021-ம் ஆண்டு வெளியான 'மரைக்கார்: அரபிகடலின் சிம்மம்'. நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவில் தயாரிக்கப்பட்ட ரூ.100 கோடி பட்ஜெட் படம் இது ஒன்றுதான். பிரியதா்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவும், இந்தி, தமிழ் போன்ற பிற மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் நடித்த காரணத்தாலும்தான் இந்த பெரிய பட்ஜெட் என்ற நிலை உருவானது.

இதற்கு அடுத்த பெரிய பட்ஜெட் படம் என்றால், அது ரூ.55 கோடியில் எடுக்கப்பட்ட 'மாமாங்கம்' திரைப்படம்தான். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்த இந்தப் படமும் ஒரு வரலாற்று படம்தான். அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஒடியன்' திரைப்படம் ரூ.50 கோடியில் எடுக்கப்பட்டது. இதற்கு அடுத்த இடத்தில் நிவின்பாலி நடித்த வரலாற்றுத் திரைப்படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' என்ற திரைப்படம் உள்ளது. இதன் பட்ஜெட் ரூ.45 கோடிதான்.

மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தின் நாயகர்கள் வரிசையில் தற்போது, துல்கர் சல்மானும் இணைந்திருக்கிறார். ஆம்.. அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிங் ஆப் கோதா' திரைப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.

இந்தப் படம் ஒரு பீரியட் படமாகும். தந்தையைப் போலவே தாதாவாக விரும்பும் ஒருவனின் கதையை மையப்படுத்திய இந்தப் படம் இருக்கும் என்பதை சமீபத்தில் வெளியான டிரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஷபீர் கல்லாரக்கல் ஸ்டைலிஷ் வில்லனாக, அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் நபராக நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் 'அடங்கமறு', 'சார்ப்பட்டா பரம்பரை' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'சார்ப்பட்டா பரம்பரை' படத்தில் இவர் நடித்திருந்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்திற்குப் பின் பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், மலையாளத்தில் 'கிங் ஆப் கோதா' அவருக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தில் காதல், குற்றம், போதைப்பொருள், அரசியல், கால்பந்து விளையாட்டு, அடிதடி போன்ற பலவித விஷயங்கள் தொடப்பட்டுள்ளது. டிரெய்லர் மூலம் இவை அனைத்தையும் ரசிகர்கள் உணர்ந்து கொண்டாலும், படத்தின் கதை எந்த போக்கில் செல்லும் என்பதை கணிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மலையாள மொழியை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியாக உள்ள இந்தப் படம், மலையாள ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகைவிருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.

வியப்பை தரும் துல்கா்

அறுபது, எழுபது வயதைக் கடந்த நடிகர்களே காதல் டூயட் பாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், 40 வயதையே நிறைவு செய்திருக்கும் துல்கர் சல்மானின் பேட்டி ஒன்று அவரது ரசிகர்களை பெரும் கவலை கொள்ளச் செய்துள்ளது. அந்த பேட்டியில், "எனக்கு 40 வயதாகிவிட்டது. இனிமேல் காதல், டூயட், ரொமான்ஸ் என்று சுற்றிக்கொண்டிருக்க முடியாது. அது என்னுடைய வயதை மீறியதாக அமைந்துவிடும்.

எனவே என்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 70 வயதை கடந்து விட்ட துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி கூட, இன்னும் மலையாள சினிமாவில் இளமையாக மனைவியுடன் காதல் செய்யும் காட்சிகளில் நடித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவரது மகன் இப்படியொரு மனநிலையில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவை ரசிக்கும் அனைத்து ரசிகர்களுக்குமே வியப்புதான்.

பிரபாஸ் படத்தில்..

'பாகுபலி' மூலம் சினிமாவில் உச்சம் தொட்டவர், பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி கி.பி.2898'. இந்தப் படத்தில், 2898-ம் ஆண்டில் நடைபெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அறிவியலுடன் புராணக் கதையையும் இணைத்து இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.

ரூ.600 கோடியில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அதோடு அமிர்தாப்பச்சனும் இந்தப் படத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானை கேட்டிருப்பதாகவும், அவரும் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்