சுதீப்பின் பான் இந்தியா படம்
|கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப் நடிப்பில் ‘விக்ராந்த் ரோணா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கன்னட சினிமாவில் பன்முகத் தன்மை ெகாண்ட கலைஞர்களில் ஒருவர், அனுப் பந்தாரி. இவர் இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல துறைகளில் சுழல்பவர். 2015-ம் ஆண்டு வெளியான 'ரங்கிதரங்கா' என்ற திரில்லர் படத்தின் மூலமாக கன்னட சினிமாவில் அறிமுகமானவர், அனுப் பந்தாரி. தொடர்ந்து 'ராஜரதா', 'ஆதி லட்சுமி பூரணா' என்ற நகைச்சுவை படங்களையும் இயக்கினார்.
இவர் தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப் நடிப்பில் 'விக்ராந்த் ரோணா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான கதையை எழுதியிருப்பவரும், அனுப் பந்தாரிதான். இந்தப் படம் பேண்டசி மற்றும் அட்வெஞ்சர் படமாக உருவாகி இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட உள்ள இந்தப் படத்திற்கான டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
கன்னட நடிகராக இருந்தாலும், சுதீப்-க்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம், ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த 'நான் ஈ' திரைப்படம். இந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் அவரை இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களிடமும் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தவிர அவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவான 'புலி' திரைப்படத்திலும் நடித்தார். மேலும் தமிழில் நேரடிப் படமாக உருவான 'முடிஞ்சா இவன புடி' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களின் ஆதரவு இருப்பதாலும், 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படியான பேண்டசி மற்றும் அட்வெஞ்சர் வகையிலான படம் என்பதாலும் இந்தப் படத்தை கன்னடம் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் ஜூலை 28-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.