நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
|நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வெளியான கன்னட திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார்.
கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சுமார் 400 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்தது.
காந்தாராவில் இடம்பெற்றிருந்த 'வராக ரூபம்' பாடலுக்கு தனி வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பாடலானது கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலில் இருந்து உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து.
இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் 'வராக ரூபம்' பாடலை திரையரங்கம் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஓ.டி.டி. தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே காந்தாரா படத்தின் கேரளா விநியோக உரிமையை பெற்றிருந்த பிருத்விராஜ் சுகுமாரன் மீது கோழிக்கோடு காவல்நிலையத்தில் பதிப்புரிமை மீறல் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகர் பிருத்விராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிப்புரிமை மீறல் தொடர்பான புகாரில் படத்தின் விநியோகஸ்தரான பிருத்விராஜ் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்ததோடு, பிருத்விராஜ் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.