உடல் மெலிந்ததால் இந்தி படவாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்
|உடல் மெலிந்த காரணத்தினால் இந்தி படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் இழந்துள்ளார்.
சென்னை,
உடல் மெலிந்து இருந்தால் நிறைய படவாய்ப்புகள் வரும் என்பது நடிகைகள் கணிப்பு. இதற்காக உணவை குறைத்தும் உடற்பயிற்சிகள் செய்தும் மெலிந்த தேகத்துக்கு மாறி வருகிறார்கள்.
இப்படி உடம்பை குறைத்த நடிகைகளில் கீர்த்தி சுரேசும் ஒருவர். ஆனால் உடல் மெலிந்த காரணத்தினால் இந்தி படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
பிரபல கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கையை மையமாக வைத்து மைதான் என்ற இந்தி படத்தை அமித் சர்மா இயக்கி உள்ளார். இதில் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கான் நடித்துள்ளார். அவரது மனைவியாக நடிக்க கீர்த்தி சுரேஷை முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவர் உடல் மெலிந்ததால் பிரியாமணியை தேர்வு செய்து விட்டனர். இதுகுறித்து இயக்குனர் அமித் சர்மா கூறும்போது, ''சையத் அப்துல் ரஹீம் மனைவி வேடத்தில் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷை கவனத்தில் கொண்டோம். ஆனால் அவர் உடல் எடையை நிறைய குறைத்துவிட்டார்.
இந்த கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் குண்டாக இருக்க வேண்டும். எனவே கீர்த்தி சுரேசுக்கு பதிலாக பிரியாமணியை தேர்வு செய்தோம்'' என்றார். உடல் மெலிந்ததால் இந்தி படவாய்ப்பை கீர்த்தி சுரேஷ் இழந்துவிட்டதாக வலைதளத்தில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.