மூத்த நடிகர் அன்பில் நெகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்...!
|நடிகர் சிரஞ்சீவி தன்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்து உள்ளார்
தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து அங்கும் பிரபலமாகி உள்ளார். தற்போது சிரஞ்சீவியுடன் நடித்துள்ள 'போலா சங்கர்' திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் மூத்த நடிகர் சிரஞ்சீவி தன்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''சீனியர் நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நடிகர் சிரஞ்சீவியிடமும் அப்படித்தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவரிடம் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், செய்யும் பணி மீது அர்ப்பணிப்பு போன்றவை இருந்தது.
'போலா சங்கர்' படப்பிடிப்பில் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். படப்பிடிப்பின்போது அவர் வீட்டில் இருந்துதான் தினமும் எனக்கு உணவு வரும். படப்பிடிப்பில் என்னோடுதான் சாப்பிடுவார். மெகா ஸ்டார் என்ற அளவிற்கு அவர் வளர்ந்த பிறகும் கூட என் அம்மா காலத்தில் அவர் எப்படி இருந்தாரோ, இப்பொழுது கூட அதேபோல சாதாரணமாக இருக்கிறார். இந்த குணம்தான் அவரை உயர்ந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்'' என்றார்.