தி காஷ்மீர் பைல்ஸ் படம் மீது நடுவர் நடவ் லாபிட் கடும் விமர்சனம் - சர்வதேச திரைப்பட விழா நடுவர்கள் ஆதரவு!
|மதிப்புமிக்க திரைப்பட விழாவில், தி காஷ்மீர் பைல்ஸ் படம் பொருத்தமற்றது என்று நடுவர் நடவ் லாபிட் விமர்சித்திருந்தார்.
கோவா,
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.
கோவா திரைப்பட விழா நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட விழா நடுவர்களில் ஒருவரான நடவ் லாபிட் கூறுகையில், "இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 15வது படமான தி காஷ்மீர் பைல்ஸ் திரையிடப்பட்டதால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம்.
'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் "கொச்சையான" மற்றும் "பிரசாரம்" வகையை சார்ந்தது. இத்தகைய மதிப்புமிக்க திரைப்பட விழாவில், கலைப் போட்டிப் பிரிவுக்கு இந்த படம் பொருத்தமற்றது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அப்போது மத்திய மந்திரிகள் உள்பட பல முக்கிய உறுப்பினர்கள் அங்கு இருந்தனர்.இந்த நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து இந்திய சர்வதேச திரைப்பட விழா நடுவர்கள் ஜின்கோ கோடோ, பாஸ்கேல் சாவன்ஸ் மற்றும் ஜேவியர் அங்குலோ பார்டுரன் நடவ் லாபிட் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நடுவர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த சுடோப்டோ சென் அவருக்கு ஆதரவளிக்கவில்லை.
சர்வதேச திரைப்பட விழா நடுவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் உள்ளடக்கத்தில் நாங்கள் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. விழா மேடையை அரசியலுக்காகப் பயன்படுத்துவதையும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நடவ் லாபிட் மீதான தனிப்பட்ட தாக்குதல்களையும் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நடவ் லாபிட் கூறுகையில், "காஷ்மீரில் என்ன நடந்தது என்று சொல்லும் திறன், கருவிகள் என்னிடம் இல்லை. அதேவேளையில், காஷ்மீரி பண்டிட்களின் சோகத்தை மறுக்க நான் விரும்பவில்லை.
ஆனால் திரைப்படத்தின் "சினிமா கையாளுதல்கள்" பற்றி மட்டுமே கருத்து தெரிவித்திருந்தேன். காஷ்மீரி பண்டிட்களின் சோகத்தை நல்ல திரைப்படமாக தீவிரமாக கையாண்டிருக்க வேண்டும்" என்று கூறினார்.