'மெய்யழகன்' படத்தின் டீசர் வெளியீடு
|நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.
மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 27ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. படத்தின் இடம் பெற்றுள்ள 6 பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் டீசரை இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர். டீசரை தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.