'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்த மலைவாழ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்...!
|இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மலைவாழ் மக்களுடன் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தில் நடித்த மலைவாழ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தை அவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், 'தண்டிக்குடியை சேர்ந்த மலைவாழ் மக்களுடன் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்தேன். பெரிய திரையில் தங்களைப் பார்த்ததில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்' என பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.