வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கரீனா கபூர்
|நடிகை கரீனா கபூர் தற்போது நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.கரீனாவின் இருவேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள்.
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது', என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் தற்போது ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை பாருங்கள். ஆதரவு தாருங்கள்', என கூறியுள்ளார்.
இதற்கிடையில் கரீனாவின் இந்த இருவேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள். 'கரீனா கபூர் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டார்', என சக நடிகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனால் செய்வதறியாது திகைக்கிறார், கரீனா கபூர்.