'கே.ஜி.எப்' பட நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்
|‘டாக்சிக்’ படத்தில் நடிகர் யஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.
'கே.ஜி.எப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.